Select Page

ஞாலத்தின் மாணப் பெரிது

Loganathan P

Loganathan P

DB admin, CTS

This article is written by my friend Loganathan. He is a DB admin by profession. He is passionate towards writing, acting and direction. His article got published in small story collection. He won award for Best Screenplay in Screenplay Writing contest and got appreciation from famous producer C.V.Kumar.

நேரம் ஏறக்குறைய 6.45:

நான் ஒரு சாதாரணன், பொறியியல் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவன். சத்தமாக மற்றவரிடம் பேச தைரியம் இல்லாதவன். குண்டுவெடிப்பில் சிக்கிய கசாப்பையும் மனிதம் கொல்லும் இலங்கை ராணுவத்தினரையும் மனதுக்குள் ஒரே கையால் அடித்து உலுக்குபவன். பெரும்பாலும் விடுகதைகளுக்கு விடை சொல்லாதவன் அல்லது விடை அறியாதவன். வாழ்க்கையில் பெரும் சோகத்தையும் சந்தித்ததில்லை, பெரும் மகிழ்ச்சியையும் கண்டதில்லை. இவ்வளவு தான் என்னைப் பற்றிக் கூற.

என் நண்பன் ஆனந்தன் இன்று காலை எனக்கு ஃபோன் செய்திருந்தான். அவன் ஒரு தனியார் தானியங்கிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் மார்க்கெட்டிங் அண்ட் அப்ளிக்கேஷன் இன்ஜினியராக இருப்பதால் எங்கள் ஊருக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலை விஷயமாக பார்க்க வருவதாகவும் அப்படியே செல்லும்போது என்னை காட்டாயம் பார்த்துவிட்டுப் போவதாகவும் என்னை பேருந்து நிறுத்தத்துக்கு வரச்சொன்னான். இதோ வந்துவிட்டேன், இன்னொரு ஃபோன் செய்தேன். இன்னும் அரை மணிநேரத்தில் வருவானாம் சற்று நேரம் தாழ்ந்ததற்காக மன்னிப்பு கேட்டு காத்திருக்குமாறு சொல்லி ஃபோனை கட் செய்தான்.

நேரம் மாலை 6.50:

‘தூரத்தில் அந்த ஆள் நின்று கொண்டிருக்கிறான், கையில் ஒரு ரூபாய் தொலைபேசியின் ரிசீவர். என்னைப் பார்த்தவுடன் அதனை துண்டித்துவிட்டு என்னை நோக்கி நடந்து வந்தான். நான் அவனிடம் இருந்து பார்வையை விலக்கி வேறு பக்கம் திரும்பினேன். என்னிடம் வந்து, “சார் ஒரு ஹெல்ப்…!” என்றான். ‘

நான், “சொல்லுங்க…!” (என்றேன் சற்று சந்தேகப் பார்வையோடு).

இதற்கிடையில் அவனைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சாம்பல் நிரத்தில் சட்டை, கருப்பு நிரக் கால்சட்டை, இன் செய்திருந்தான், ஃபார்மல் சூ அணிந்திருந்தான். முகத்தில் மூன்று நாள் தாடியும் வெத்துப் பாக்கெட்டுமாக பாவமான முக பாவனையில் நின்றான். என், நான் வளர்ந்த சுற்றுச்சூழல் இது மாதிரி ஆட்களை நம்பக்கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது. அவன் ஏதோ சொல்ல எத்தனிக்கிறான்.

“ஐ எம் ஃப்ரம் பேங்களூர் சார், ஐ எம் அன் இன்ஜினீயர் இன் எல்.அன்.டி கம்பெனி”

“ஓ…”

“யெஸ் சார், இங்க பழனி கோவில் தரிசனத்துகாக வந்தேன், எனக்கு சுகர், பி.ப்பி ரெண்டும் இருக்கு, இங்க திண்டுக்கல் வந்து சேலம் பஸ் ஏர வந்த வரைக்கும் ஞாபகம் இருந்துச்சு. அதுக்கப்புறம் மயக்கம் போட்டுட்டேன்னு நெனைக்கிறேன் சார்… எழுந்து பாத்தா…. (விசும்பி.. விசும்பி… அழுகை) எழுந்து பாத்தா பாக்கெட்ல இருந்த இம்போட்டட் செல் மிஸ்ஸிங் சார், பர்ஸும் காணோம்… (கண்ணீர் மறுபடியும்..) எயிட் தௌசன் ருப்பீஸ், 4 ஏ.டி.அம் கார்ட்ஸ்.. எல்லாம் போச்சு சார்…”

(ஏனோ தெரியவில்லை மனதுக்குள் அவர்மேல் மரியாதையும் பரிவும் வந்தது அவர் சொன்ன அனைத்திலும் எனக்கு அந்த வார்த்தைகள் மட்டும் நன்றாகப் பதிந்தது “ஐ எம் அன் இன்ஜினீயர் இன் எல்.அன்.டி கம்பெனி”. இவர் நல்லவராகத்தான் இருப்பார். என்ன இன்ஜினியர் என்று கேட்டுப் பார்க்கலாமா??)

“அச்சச்சோ….!”

“யாரும் நின்னு பேசக்கூட மாட்ராங்க சார், நம்ப மாட்டீங்குறாங்க, நானா இருந்தாலும் அப்புடித்தான சார்… ஆனா எனக்கு இப்புடி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல சார், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் இப்புடி தெருவுல நிக்குறேன்…”

(எனக்குள் இனம்புரியா மகிழ்ச்சி, நானும் மெக்கானிக்கல் தானே…! அதே நேரம் ஒரு பொறியாளனுக்கு ஏற்பட்ட நிலைமை என்னை சமூகத்தின்மேல் கோபமுறச் செய்ததது. ஒரு மனிதன் மயக்கமுற்றால் தண்ணீர் தெளிக்கக் கூட ஆளில்லை ஆனால் பர்ஸ் அடிக்க பல பேர் உண்டு. என்ன சமூகம் இது…??)

“சாப்புட்டீங்களா…?”

“அதெல்லாம் மதியம் பழனியில ஒரு பெரிய ஹோட்டல்ல முடிச்சுக்கிட்டேன் சார்… இப்போ நான் ஊருக்கு போயாகனும் சார்.. அது போதும்…”

“நீங்க இன்ஜினியரா?.. எல்.அன்.டி ல??”

“ஆமாம் சார், ரெண்டு பசங்க இப்போ தான் பாக்கெட்ல இருந்த 2 ரூபாய்க்கு ஃபோன் பண்ணேன், வீட்டுல பணம் காணாமப் போன விசயம் சொல்லல சார்.. அவங்கள ஏன்.. கஷ்டப் படுத்தனும்?? டுடே மை பர்த்டே சார்.. ஐ நெவர் ஃபர்கெட் திஸ் ………கிங் பர்த்டே சார்… (கைகள் நடுங்கின, ஒரு கையை தன் வாயில் அணைத்துக் கொண்டார். கண்கள் மறுபடி ஒரு முறை நீர் சுரத்தது) “

“சார் அழுகாதீங்க சார்….!”

“சாரி சார்… நான் என் கோவை ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டேன், அவர் கேரளா போயிருக்கார் சார், அதனால அவர் ஒய்ஃப் கிட்ட பணம் வாங்கிக்க சொன்னாரு.. அதுக்கு கொஞ்சம் பணம் ஹெல்ப் பண்ணமுடியுமா சார்.. உங்க அக்கௌண்ட் நம்பர் சொன்னீங்கன்னா கூட… நான் போட்…”

“என்கிட்ட 30ரூவா தாங்க இருக்கு… கோவை போக 100 ருவா வேணுமே… என் ஃப்ரெண்ட் வருவான் அவன்கிட்ட கேட்டுவேணா வாங்கித் தாறேன் சார்…”

“சரி சார் கொஞ்சம் பாத்து செஞ்சீங்கன்னா.. ரொம்ப ஹெல்பா இருக்கும்… என்கிட்ட 20 ரூப்பிஸ் இருக்கு சார் 80 மட்டும் நீங்க… “

“ஓகே சார்.. வாங்கித் தாறேன் டோண்ட் வரி…”

“தாங்க்ஸ் சார்…!”

“இட்ஸ் ஓகே சார்… நானும் ஒரு இன்ஜினியர் தான் சார்..”

“இஸ் இட்… சார் என்ன இன்ஜினியர் சார்…? “

“மெக்கானிக்கல்..”

“என்ன சார்.. என்ன ஜாப் பண்றீங்க… வேற ஜாப் போற ஐடியா இருக்கா சார்?? நா வேணும்னா..”

“வேல தேடிட்டிருக்கேன் சார்…!”

“மை காட்.. என் மெயில் ஐ.டி நோட் பண்ணிக்குங்க சார்…! நா உங்களுக்கு வேல ரெடி பண்றேன் சார்…!”

(எனக்குள் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது… செல் எடுத்து அவர் சொல்ல சொல்ல ஈமெயில் ஐ.டி யை நோட் செய்தேன். மறுபடி என் நண்பன் ஆனந்த்தனுக்கு ஃபோன் செய்தேன் இன்னும் 10 நிமிஷம் என்றான். மனதுக்குள் எதோ காத்திருந்த தருணம் அமைந்துவிட்டதுபோல் உணர்ந்தேன் கடவுள் மீதும் விதியின் மீதும் நம்பிக்கை வந்தது)

“நீங்க ஃப்ரஷரா சார்??”

(போச்சுடா…! ஃப்ரஷர் என்றால் வேலைக்கு சிபாரிசு செய்ய மாட்டாரோ…!)

“ஆமா சார்…!”

“ம்ம்ம்ம்…..! (என் இதயம் படபடத்தது) இட்ஸ் ஓகே.. நான் பாத்துக்குறேன். நீங்க ரெஸ்யூம் மட்டும் செண்ட் பண்ணுங்க.. 10 டேஸுக்குள்ள நான் உங்களுக்கு எல்.அன்.டி.லயே பாத்துக் கொடுத்துடுறேன் சார்… “

“…..” (தலை ஆட்டினேன்)

“உங்க ஃப்ரெண்ட் வந்துடுவாரா சார்? ஏன்னா அவங்க லேடி அன்-டைம்ல போறது நல்லா இருக்காதுல்ல???”

“இதோ வந்துடுவான் சார்…”

“ஓகே சார்…!”

“………….” (கைகடிகாரத்தைப் பார்த்தேன்..)

“கூப்பிட்டா… நிக்கக் கூட யாருக்கும் நேரம் இல்லை சார்.. உங்கள மாறி ஸ்டூடண்ட்ஸ் நாலு பேர் வந்தாங்க சார்.. கேட்டேன் இந்த மாறின்னு… இப்புடி போயிட்டு வந்துடுறோம்னு சொல்லிட்டு வந்த பஸ்ல ஏறிப் போயிட்டாங்க.. அவங்களுக்கு என்ன அவசரமோ….”

(அவர்கள் இவரை ஏமாற்றியதுகூட தெரியாத மனிதராக இருக்கிறாரே…!)

“ஒன்ஸ் அப்பான் எ டைம் ஐ எம் எ பாக்ஸர் சார்.. 1995 சாம்பியன் சார்…”

“ஓ…..!”

“YMCA ல சார்…!”

(எனக்கு YMCA என்றால் என்ன என்றே தெரியாது.. தெரிந்த மாதிரி தலையாட்டினேன்)

“சார் உங்க ஃப்ரெண்ட்….”

“இருங்க….” (மறுபடியும் ஃபோன்… ஆனந்தன் வந்துவிட்டான் நான் இருக்கும் இடத்துக்கு வரச் சொன்னேன்.)

“சார் உங்க ஃப்ரெண்ட்கிட்ட இந்த விஷய்த்தைலா… சொல்ல வேணாம்…”

“சொல்லாம எப்பிடி சார் பணம் கொடுப்பான்..?”

“………” (மிகவும் சங்கோஜத்துடன் நின்றார்)

“சரி நான் அவனைத் தனியே கூட்டிட்டு போயி சொல்லிக்குறேன்… ம்?”

“தாங்ஸ் சார்…!”

(புன்னகை செய்தேன்)

“போன உடனே முதல்ல உங்களுக்கு வேல ரெடி பண்ணிட்டு தான் மறுவேல…!!”

“……..” (என்ன சொல்வது, செய்வது என்று தெரியவில்லை. ஆனந்தனிடம் சொன்னால் பிச்சைக்காரனிடம் கூட வேலை கேக்குறியாடா என்று ஏளனம் செய்வான்… அவனுக்கு இந்த மனிதரைப் பற்றி என்ன தெரியும்…?)

ஆனந்தன் வந்துவிட்டான்… நீண்ட நாள் பிரிந்திருந்த காரணத்தால் அவனைப் பார்த்தவுடன் இறுகக் கட்டிக்கொண்டேன்.. பின்பு விஷயத்தை கூறினேன். அவன், “நீ ஏண்டா இந்த வேலையெல்லாம் பாக்குற… இப்போ இந்த ஆளுக்கு உதவி பண்ணனும்னு எதும் கட்டாயம் இருக்கா??” (நான் அவனிடம் அவர் எல்.அன்.டியில் வேலை பார்ப்பதை சொல்லவில்லை.)

“ப்ளீஸ் டா எனக்காக ஒரு 50ருவா…!”

கொடுத்தான். அவரிடம் கொண்டுபோய் கொடுத்தேன். மனதில் அவர் சுகர், பி.ப்பி பேஷண்ட் என்பது ஞாபகம் வந்தது. வழியில் எங்கும் விழுந்துவிட்டால்?

“இந்தாங்க சார்… 80 ரூவா இருக்கு கரெக்டா கோவை போயிடலாம்.. ம்.. அப்பறம் என் ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்குங்க…!”

அவர் சட்டைபையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பஸ் டிக்கெட்டை எடுத்து குறித்துக் கொண்டார்.

“போயி சேந்ததும் எனக்கு ஒரு ஃபோன் போடுங்க…”

“கண்டிப்பா சார்….! ரொம்ப தாங்ஸ் சார்… சுகர் பி.ப்பி வெச்சுக்கிட்டு எங்கயும் போறதுக்கே பயமாருக்கு சார்…!”

“பரவால்ல… போயிட்டு வாங்க..” என்று அனுப்பி வைத்தேன்.

ஆனந்தன் என்னைப் பார்த்து நக்கலாக சலாம் வைத்தான். பிறகு அவன் தங்கியிருந்த விடுதியில் சிறிது நேரம் கதை பேசினோம். அவனும் என் வேலைக்கான விவரங்களை அவன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கூறினான். அந்த இரவு அவனிடம் வெகு நேரம் பேசிவிட்டு சென்னை கிளம்பும் வண்டியில் ஏற்றிவிட்டு வந்தேன். நிம்மதியாக தூங்கினேன். எதையோ சாதித்ததுபோல ஒரு நிறைவு.

மறுநாள் காலை:

நேரம் ஏறக்குறைய 7.30:

காலையில் அம்மா எழுப்பினாள். எனக்கு எதோ ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வருவதாக. விழித்துப் பார்த்தேன், அந்த எண் கண்டிப்பாக எனக்கு தெரியாது. பச்சை பொத்தானை அழுத்தினேன். அந்த பக்கம் நேற்று கேட்ட குரல்,

“சார் நான் முருகன் சார்..”

“…….”

“நேத்து பேசினோமெ சார் நீங்க கூட எனக்கு பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வெச்சீங்களே.. “

“ஓ.. சொல்லுங்க.. சொல்லுங்க… கோவை போய் சேந்தீங்களா..?”

“போனேன் சார், நீங்க ஃபோன் பண்ண சொன்னீங்கள்ள… அதான் சார்…”

“ஓ ஓகே ஒகே… எப்போ கெளம்புரீங்க பேங்களூர்…?”

“இப்போ அதுல தான் சார் கொஞ்சம் சிக்கல்… “

“என்னாச்சு சார்..?”

“கோவை போயி என் ஃப்ரெண்ட் மனைவிய பாக்கப் போனா, அவங்க எதொ எழவுக்கு போயிட்டாங்களாம் சார்…”

“அச்சச்சோ.. அப்பறம் என்ன பண்ணப் போறீங்க…?”

“அதான் சார் திருப்பி திண்டுக்கல்லுக்கே வந்துட்டேன்… நீங்க கொஞ்சம் பேங்களூர் போக ஹெல்ப் பண்ணீங்கன்னா நல்லாருக்கும் சார்…”

“என்னா…. சார்…..”

“சார் ப்ளீஸ் சார்… ஒரு 350 இல்லாட்டி சாப்பாட்டுக்கு சேத்து ஒரு 500 ஆ கொடுத்தீங்கன்னாக்கூட போதும் சார்…”

(என் அடிவயிற்றில் புளியை கரைத்தது. எதுக்குடா நம்பர் கொடுத்தோம்.. சை…!)

“சார் நான் திண்டுக்கல் இல்ல சார் பக்கத்துல…”

“எந்த ஊருன்னு சொல்லுங்க சார். என்கிட்ட ஒரு 30ருவா மீதி இருக்கு நா வந்து நேர்லயே வாங்கிக்குறேன்…”

(வெகுநேரம் பேசாமலே இருந்தேன்)

“சரி சார் 8 மணிக்கு ஃபோன் பண்ணுங்க நா சொல்றேன்…”

“ஓகே சார் தாங்க் யூ சார்…”

இணைப்பை துண்டித்தான். அப்பா என் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

“என்னடா யார் ஃபோன்ல???”

நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தேன். அப்பா அனைத்தையும் கூர்ந்து கேட்டார். அதன்பின்,

“அவன் ஊர் எதுன்னு கேட்டியா…?”

“பேங்களூர்…பா “

“பேங்களூர்காரன் தமிழ் பேசுவானா??”

“நம்ம ஊர்க்காரன் மாரி நல்ல தமிழ் பேசுனான்பா..”

“அதான்பா… எந்த ஊரு…?”

“………”

“தமிழ் தெரிஞ்சாதானே இப்புடி பேச முடியும்… ம்?”

“ஆமாப்பா…”

“நார்மலா யோசி.. கர்நாடகா காரனுக்கு தமிழ் தெரியுமா??”

“……..”

“சரி விடு… நீ குடுத்த பணத்துக்கு எவ்ளோ தூரம் போக முடியும்..?”

“கோவை வரைக்கும் தான்பா…”

“அவன் என்ன சொல்றான், கோவை போனேன்னும் போயிட்டு வந்துட்டேன்னும், இப்போ கையில 30 ரூவா இருக்குன்னும் சொல்றான் இல்லையா…?”

“ஆமாப்பா… அந்த பணத்த வெச்சுக்கிட்டு கோவை போக மட்டும்தானே முடியும்…”

“சோ… அவன் கோவை போகவே இல்ல… “

“……..”

“30 ருவா உனக்கு நாமம், ஆனந்தனுக்கு 50 ருவா நாமம்….”

“இப்போ 8 மணிக்கு அந்தாள் கால் பண்ணுவார்ப்பா…”

“கட் பண்ணிடு…”

அனைத்தையும் சொல்லிவிட்டு அப்பா குளிக்க சென்றார். நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். இப்போது இந்த முருகனை நம்பாமல் போனால் கைக்கு வந்த ஒரு வேலை காணாமற்போகும். அவன் கூறியது அனைத்துமே அவன் போட்டிருந்த உடுப்புகள் முதற்கொண்டு நம்பும்படியாகத் தானே இருந்தது. இன்று அப்பா கேட்ட ஒரு கேள்வி கூட என் மனதில் தோன்றாதது ஆச்சர்யமாக இருக்கிறது எது என் கண்ணை மறைத்தது? ஒருவேலை அவன் சொல்வது உண்மையாக இருந்தால் பாவம் வந்து சேராதா???

சரியாக 8.10க்கு அழைப்பு வந்தது அதே நம்பரில் இருந்து… அழைப்பைத் துண்டித்து விட்டேன். மனம் எங்கோ ஒரு மூலையில் ‘ஒரு பொறியாளனுக்கு இன்னொரு பொறியாளனே உதவி செய்யவில்லை என்று சமூகம் என்னைத் திட்டாதா !!!’ என்று அலறியது. சிறிதுநேரம் அதையே நினைத்துவிட்டு மந்து ஆறியபின் முகம் கழுவச் சென்றேன்.

நேரம் ஏறக்குறைய 8.10:

நானொரு குடும்பத் தலைவன், மாதமானால் கையைச் சொரிந்து கடன்வாங்கும் தமிழன். ஒரே ஒரு பையன் போதுமென நிறுத்திக்கொண்ட சம குடிமகன். இது மாத கடைசியாதலால் கொஞ்சம் சோகையாக நாட்கள் செல்கின்றன. அதனால்தான் ஹோண்டா பைக்கை வீட்டிலேயே விட்டுவிட்டு பேருந்தில் செல்ல நின்றிருக்கிறேன். இன்னும் 10 நிமிஷமாவது ஆகும் அந்த நகரப் பேருந்து வர. ம்ம்ம்ம்…. அதோ,

‘தூரத்தில் அந்த ஆள் நின்று கொண்டிருக்கிறார், கையில் ஒருஒரு ரூபாய் தொலைபேசியின் ரிசீவர். என்னைப் பார்த்தவுடன் அதனை துண்டித்துவிட்டு என்னை நோக்கி நடந்து வந்தான். நான் அவனிடம் இருந்து பார்வையை விலக்கி வேறு பக்கம் திரும்பினேன். என்னிடம் வந்து, “சார் ஒரு ஹெல்ப்…!” என்றான்.’
“சில்லர இல்ல போப்பா…!” என்றேன்.

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories