Select Page

பெண்களுக்காக கொடுத்த குரல்

 

நான் 7 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். எங்கள் தமிழ் அய்யா தமிழின் மீது மிகவும் நாட்டம் கொண்டவர். எப்பாடு பட்டாவது தமிழில் உள்ள அனைத்தையும் நடத்தி விடுவார். அது மாணவர்களுக்கு புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி. தேர்வு நெருங்கியது. ஆனால் இன்னும் சில பாடம் முடிக்க படாமல் இருந்தது.

பொதுவாக எங்க பள்ளி 4.15 PM கு முடிந்து விடும். நாங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள அண்ணா நகர் மைதானத்திற்கு சென்று மட்டை பந்து விளையாண்டுவிட்டு செல்வோம். ஆனால், அன்று சிறப்பு வகுப்பு வைத்து மாணவ சமுதாயத்தின் வில்லன் ஆனார் எங்கள் அய்யா. வகுப்பு தொடங்கியது.

நானும் என் நண்பனும் அருகருகே அமர்ந்து கொண்டோம். வழக்கமாக நாங்கள் என்ன செய்வோமோ அதை செய்தோம். தூங்குவோம் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். நாங்கள் நல்ல பையன்கள். வழக்கமாக எதாவது ஒரு நோட் ஐ எடுத்து கடைசி பக்கம் திருப்பி கட்டமிட்டு விளையாடுவோம். அது புள்ளி வைத்து கட்டம் சேர்க்கும் விளையாட்டாக இருக்கலாம் அல்லது கட்டத்திற்குள் எழுத்து நிரப்பும் விளையாட்டாக இருக்கலாம். எண்ணத்திற்கு தோன்றுவது அன்றைய விளையாட்டு.

நீண்ட நேரமாக விளையாண்டு கொண்டே இருந்தோம். மணி 5.45 ஆனது. இன்னும் அவர் முடித்த பாடு இல்லை. என் நண்பன் சினம் கொண்டு “என்னதான் டா சொல்றாரு அவரு” என்று என்னிடம் கேட்டான். அவ்வளவு நேரமும் ஒன்றும் கவனிக்க வில்லை இருவரும். “இரு டா என்னனு பாக்குறேன்” என்று கூறி, என் தலையை சற்று தூக்கி செவிகளை கூராக்கி அவர் கூறுவதை கேட்டேன். அவரோ “பாரதி பெண்களுக்காக குரல் கொடுத்தார்” என்று கூறினார். அதை கேட்டு மறுபடியும் தலையை இறக்கிகொண்டேன். என் நண்பனிடம், “எதோ பாரதி பெண்களுக்காக குரல் கொடுத்தாரமா டா” என்றேன்.

அவன் அதோடு விடாமல், பாரதி மட்டும் தான் குரல் கொடுப்பாரா. நாமளும் கொடுக்கலாம் என்றான். நானும் ஒரு வேகத்தில் சரி என்றேன். இருவரும் 1.. 2.. 3.. சொல்லி ஒன்றாக சேர்ந்து“ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ” என்று சத்தம் எழுப்பினோம். அமைதியான இடத்தில் செம்பை உருட்டி விட்டது போல, கடமுட கடமுட கல கல கப கப என்று ஒரே சிரிப்பு சத்தம். எங்கள் அய்யாவிற்கும் எங்கள் குரல் கேட்டு விட்டது. ஆனால் யார் அந்த அழகான குரலுக்கு சொந்தகாரர்கள் என்று அவருக்கு தெரியவில்லை.

அவர் “யாரு டா சத்தம் போட்டது?” என்று கேட்டார். எங்கள் வகுப்பில் உள்ள அணைத்து கண்களும் எங்கள் இருவரின் மீது பாய்ந்தது. அவ்வளவு தான், இதற்கு மேல் நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. கச்சேரி தான்.

திருப்பதி எப்படி லட்டு கு புகழ் பெற்றதோ, திருநெல்வேலி எப்படி அல்வா கு புகழ் பெற்றதோ, திண்டுக்கல் எப்படி பூட்டிற்கு புகழ் பெற்றதோ, லிங்குசாமி எப்படி தன் மொத்த வித்தையை இறக்கி புகழ் பெற்றாரோ, அதே போல எங்கள் தமிழ் அய்யா கொட்டு வதில் புகழ் பெற்றவர். இங்கே அவர் கொட்டினால், 10 வகுப்பிற்கு அப்பால் உள்ளவனுக்கும் தெளிவாக கேட்கும். அவர் ஓங்கி கொட்டினால் ஒன்றரை டன் வெயிட்.

அவர் எங்கள் இருவரையும் வர சொன்னார். நாங்கள் பம்பி கொண்டே சென்றோம். “நான் பாடம் நடத்தும் போது அங்க என்ன டா சத்தம்? கொழுப்பு.. எல்லாம் கொழுப்பு… இங்க வா… குனி.. ச்.. குனி டா..

டொக்…
டொக்… “

இது டேபிள் மேட் சத்தம் இல்ல. எங்கள் தலையில் இடி இறங்கிய சத்தம். போக்கிரி படத்தில் வருவது போல பொறி கிளம்பி பூமி அதிர்ந்தது எங்களுக்கு. தலையை சுற்றி கார்ட்டூன் படங்களில் வருவது போல 10 காக்கைகள் சுற்றியது.

2 நிமிடங்கள் கூட தாண்டவில்லை. எங்கள் மண்டைக்கு மேல் ஒரு கொண்டை. எங்கள் கண்களில் வெள்ளம். அணை போட்டு தடுத்தால் அணை சுக்குநூறாக நொறுங்கிவிடும். அப்படி ஒரு வெள்ளப்பெருக்கு. வெகு நேரமாக தேய்த்தும் ஒன்னும் குறையவில்லை.

எங்கள் அய்யா கோபத்தில் வகுப்பை அத்துடன் முடித்து கொண்டார். ஆகையால் மற்ற மாணவ கண்மணிகளுக்கு நாங்கள் குலதெய்வம் ஆனோம். அனைவரும் கிளம்பினர்.

நானும் என் நண்பனும் மெதுவாக மிதிவண்டி நிலையத்திற்கு சென்று இருவரும் ஓரமாக அமர்ந்து மாத்தி மாத்தி தேய்த்து கொண்டோம். அந்த சமயம் எங்கள் பள்ளி காவல் காரன் வந்தார். “என்ன டா தலையை தேச்சுட்டு இருக்கீங்க? என்ன விசியம்” என்றான். நாங்கள் “தமிழ் அய்யா கொட்டிடாறு” என்றோம். அதற்கு காவல் காரர் “அந்த ஆளு கொட்டின ஒரு வாரம் வீக்கம் கொறையாது, கெளம்புங்கடா” என்றார். இருவரும் கிளம்பி வீடு திரும்பினோம்.

பெண்களே, பார்த்துகொள்ளுங்கள். உங்களுக்காக 7 ஆம் வகுப்பு படிக்கும் போதே குரல் கொடுத்து, அது பிடிக்காத சமூக விரோதிகளிடமிருந்து அடியும் வாங்கிஉள்ளோம். நாங்கலாம் அப்பவே அப்படி.

 

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories